"ஹவாய் நிறுவனத்தை தடை செய்தால்.."- இந்தியாவை எச்சரிக்கும் சீனா!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து

உலகின் மிகப்பெரிய சாதன தயாரிப்பாளரான ஹவாய், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் இழுபறியின் மையத்தில் உள்ளது.

ஹைலைட்ஸ்
  • இந்தியாவின் தூதர் சீன வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டர்
  • அமெரிக்கா குறித்த சீனாவின் பிரச்னைகளை கேட்க இந்த சந்திப்பு ஏற்பாடு
  • அக்டோபரில், பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்

சீனா தனது ஹவாய் தொழில்நுட்பங்கள் இந்திய நாட்டில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது, அப்படி செய்தால் அதன் விளைவுகளை சீனாவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த தகவல் சில ஆதாரமான வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ளது.

அடுத்த சில மாதங்களில் அடுத்த தலைமுறை 5G செல்லுலார் நெட்வொர்க்கை நிறுவுவதற்கான சோதனைகளை இந்தியா நடத்த உள்ளது, ஆனால் சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளரை பங்கேற்க அழைக்கலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய சாதன தயாரிப்பாளரான ஹவாய், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் இழுபறியின் மையத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தேசிய பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோளிட்டு மே மாதத்தில் இந்த நிறுவனத்தை தடை செய்துள்ளது. சீனா உளவு பார்ப்பதற்காக இதை பயன்படுத்தலாம் என்று கூறி ஹவாய் உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்கா தனது நட்பு நாடுகளையும் வேண்டியுள்ளது.

உலகெங்கிலும் 5G மொபைல் உள்கட்டமைப்பிலிருந்து ஹவாய் வெளியேற்றப்பட வேண்டும் என்ற அமெரிக்கா கூறுவருகிறது. இது பற்றி சீனாவின் பிரச்னைகளை கேட்க, ஜூலை 10 ம் தேதி அன்று பெய்ஜிங்கில் இந்தியாவின் தூதர் விக்ரம் மிஸ்ரி சீன வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டதாக புதுடில்லியில் உள்ள இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பின் போது, ​​சீன அதிகாரிகள் ஹவாய்  நிறுவனத்திற்கு தடை விதித்தால் சீன வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் மீது "தலைகீழ் பொருளாதாரத் தடைகள்" ஏற்படக்கூடும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்துக் கோரியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்ட ராய்ட்டர்ஸ் கோரிக்கைக்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகமும் பதிலளிக்கவில்லை.

அக்டோபரில், பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான சந்திப்பை வட இந்தியாவின் தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நடத்தவுள்ளார், அங்கு இருவரும் 53 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 3,75,213 கோடி) வர்த்தகம் உள்ளிட்ட வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பொருளாதார பிரிவின் தலைவர் அஸ்வானி மகாஜன், இந்தியாவில் ஹவாய் செயல்பாடுகள் குறித்து கவலைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

"ஒரு நாடாக எங்கள் ஹவாய் மீதான நம்பிக்கை இன்னும் உறுதியாகவில்லை. உலகளவில், ஹவாய் உள்ளிட்ட பல சீன நிறுவனங்கள் தாங்கள் திட்டங்களை 'குறைக்கின்றன' என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன" என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஹவாய் உட்பட 5G தொழில்நுட்ப சோதனை திட்டத்திற்கு ஆறு நிறுவனங்களிலிருந்து வேண்டுகோள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மற்றவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் ஸ்வீடனின் எரிக்சன், பின்லாந்தின் நோக்கியா மற்றும் தென் கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.